காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை உடனடியாக அதிகரிக்க வேண்டியது அவசியம் எனத் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் தெரிவித்துள்ளார்.
“நீடித்த தீர்வை எட்டுவதற்கு, வன்முறையை உடனடியாகத் தணிக்கவும், வன்முறையைத் தவிர்க்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் ஐநா பொதுச் சபையில் தெரிவித்தார்.
ஐ.நா. சபையில் காசா நெருக்கடி குறித்து UNGA மாநாட்டில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் பேசுகையில்,
“இந்தியாவைப் பொறுத்த வரையில், காசாவில் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் மோதலால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். மனிதாபிமான நெருக்கடி ஆழமடைந்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் மோதலால் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காசா சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் உயிரிழந்துள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது, மோதலில் பொதுமக்கள் உயிரிழந்ததை நாங்கள் கடுமையாக கண்டித்துள்ளோம்.
“வன்முறை மற்றும் விரோதங்கள் மேலும் அதிகரிப்பதைத் தடுப்பது மிகவும் முக்கியமானது. எந்தவொரு மோதல் சூழ்நிலையிலும் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க வேண்டியது அவசியம். சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் எல்லா சூழ்நிலைகளிலும் மதிக்கப்பட வேண்டும்.
பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா நீண்டகால மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளது. அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க கோருகிறோம்.
இஸ்ரேலின் பாதுகாப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டும், பாலஸ்தீன மக்கள் பாதுகாப்பான எல்லைக்குள் சுதந்திரமாக வாழக்கூடிய இரு நாடுகளின் தீர்வை ஆதரிப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது எனத் தெரிவத்தார்.
இறுதி நிலைப் பிரச்சினைகளில் இரு தரப்புக்கும் இடையே நேரடியான மற்றும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் அடையப்படும் இரு நாடுகளின் தீர்வு மட்டுமே நீடித்த அமைதியை வழங்கும் என்று அவர் மேலும் கூறினார்.
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.