இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தாவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹவுரா மைதான் – எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹவுரா மற்றும் கொல்கத்தா ஆகிய இரட்டை நகரங்களை இது இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் 6 ரயில் நிலையங்கள் உள்ளன. அதில் 3 நிலையங்கள் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஹூக்ளி நதிக்கு 32 மீட்டர் ஆழத்திலும், சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு நதியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாதையை 45 விநாடிகளில் ரயில்கள் கடக்கும். இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
கொல்கத்தா மெட்ரோவின் ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் மெட்ரோ பிரிவு, கவி சுபாஷ்-ஹேமந்தா முகோபாத்யாய் மெட்ரோ பிரிவு, தாரதாலா-மஜெர்ஹாட் மெட்ரோ பகுதியையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்தப் பிரிவுகள் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கவும், தடையற்ற, எளிதான போக்குவரத்து சேவையை வழங்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.