ரன்தீப் ஹூடா எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகியது.
சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’. ரன்தீப் ஹூடா இயக்கி நடித்துள்ள இப்படத்தின் திரைக்கதையை ரன்தீப் மற்றும் உட்கார்ஷ் நைதானி ஆகியோர் எழுதியுள்ளனர்.
இந்த படத்தை ரன்தீப் ஹூடா ஃபிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இந்த ட்ரெய்லர் அந்தமானின் காலாபாணி சிறையில் சாவர்க்கர் நடந்து செல்லும் காட்சியோடு தொடங்குகிறது.
“அகிம்சை மூலம் இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று நாம் அனைவரும் படித்திருக்கிறோம், ஆனால் இது அந்தக் கதை அல்ல” என்று பின்னணியில் வரும் வாய்ஸ் ஓவரோடு, சிறையில் சாவர்க்கர் பட்ட துன்பங்கள் காட்டப்படுகின்றன.
வன்முறை தீர்வல்ல என்று கூறும் மகாத்மா காந்தியிடம், வெள்ளையரை முழுதாக விழுங்கக்கூடிய மக்களை நான் திரட்டிக் கொண்டிருக்கிறேன் என்று சாவர்க்கர் பேசுவதாக வரும் வசனம் கவனிக்க மக்களை வைக்கிறது.
இந்நிலையில் படம் குறித்து பேசிய இயக்குனர், நடிகர், தயரிப்பாளரான ரன்தீப் ஹூடா, ” இந்த படத்திற்காக என்னை அணுகிய போது சாவர்க்கரை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது” என்று கூறினார்.
பின்னர் அவரை பற்றி விரிவாகப் படித்தபோது, அவருடைய வாழ்க்கை மற்றும் அக்கால சுதந்திரப் போராட்ட வீரர்கள் அவர் மீது கொண்டிருந்த செல்வாக்கு தன்னை வியப்பில் ஆழ்த்தியகாக கூறினார்.
மேலும் நம் தேச மக்கள் ஏன் அவரை பற்றி அறியவில்லை என்பதை நினைக்கும் போது எனக்கு கோபம் தான் வந்தது. அவரின் வாழ்க்கையை பற்றி உலகிற்கு காட்டவே நான் இப்படத்தை ஏற்றுக்கொண்டேன் என கூறினார்.
மேலும் இந்தத் திரைப்படம் அவரது அழியாத மனப்பான்மை மற்றும் நம் தேசத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் அவரின் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஆயுதப் புரட்சியின் பங்களிப்புக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இது சாவர்க்கரைச் சுற்றியுள்ள பல கட்டுக்கதைகளை உடைத்து உண்மையை எடுத்துரைக்கும் என்றும் நேர்மையான சித்தரிப்பு மூலம் அவரது வரலாற்றை மதிப்போம் என்று கூறினார்.
இப்படம் குறித்து தயாரிப்பாளர் சன்தீப் சிங் கூறுகையில், ” விநாயக் தாமோதர் சாவர்க்கர் ஒரு உண்மையான தேசபக்தர். ஆனால் மக்கள் மத்தியில் அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளார். ஆனால் இப்படம் உண்மைத் தகவல்களை கொண்டது.
வரலாற்றை திருத்தவும் முடியாது, கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை மாற்றவும் முடியாது. ஆனால் அதை மக்களுக்கு எடுத்துக்காட்ட முடியும். மிகச்சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரைப் பற்றி படம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த பாக்கியமாகவும் நன்றியுடனும் உணர்கிறேன்” என்று கூறினார்.