பராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடிய பிரக்ஞானந்தா 56-வது நகர்த்தலில் அப்துசத்தரோவை தோற்கடித்தார்
செக்குடியரசின் பிராக் நகரில் பராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் விளையாடுகின்றனர். இதன் 6-வது சுற்று போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் இந்திய கிராண்ட்மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா விளையாடினார். அவருடன் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோ மோதினார். இதில் கருப்பு நிற காய்களை கொண்டு ஆடிய பிரக்ஞானந்தா 56-வது நகர்த்தலில் அப்துசத்தரோவை தோற்கடித்தார். இதன் மூலம் தனது மூன்றவது வெற்றியை பதிவு செய்தார் பிரக்ஞானந்தா.
மற்ற போட்டிகளில் இந்தியாவின் டி. குகேஷ், விதித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டத்தில் தோல்வியை அடைந்தனர். 6 சுற்று முடிவில் நோடிர்பெக் அப்துசத்தரோவ் 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஹங்கேரியை சேர்ந்த ரிச்சர்ட் ராப்போர்ட் , ஈரானை சேர்ந்த பர்ஹாம் மக்சூட்லூ, தமிழக வீரர் பிரக்ஞானந்தா தலா 3½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.