புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 11-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களுக்கும், கல்வி நிறுவனங்களும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் மிகவும் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு மாசித் திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை அடுத்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனை நடைபெறுகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வந்து அம்மனை பய பக்தியுடன் வழிபட்டு செல்கின்றனர். மேலும், பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக 16-ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பணி நாள் எனவும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவித்துள்ளார்.