ககன்யான் திட்டத்தின் வீரர்கள் 4 பேருக்கும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் புதிய விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் எனப் பெயரிட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் மூலம் வரும் 2025ஆம் ஆண்டில், நான்கு இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் விண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்படுவார்கள்.
ராக்கெட் ஏவும் வாகனம் மார்க் -3 (LVM-3) மூலம் செலுத்தப்படும் இந்திய விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கி.மீ சுற்றுப்பாதையில் 3 நாட்கள் ஆய்வு செய்வார்கள். பிறகு மீண்டும் பூமியில் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டு இந்திய கடற்பரப்பில் விழச் செய்து மீட்டு வரப்படுவார்கள். இதுவே ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லும் 4 வீரர்களை பாரத பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்ல உள்ளனர்.
இந்நிலையில் தற்போது இவர்கள் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) புதிய விண்வெளி வீரர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
விண்வெளிப் பயணம், உந்துவிசை மற்றும் காற்றியக்கவியல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பொறியியல் துறைகளில் பயிற்சிகள், யோகா வகுப்புகள், மற்றும் ஒரு விண்வெளி விமானத்தில் ஏற்படும் ஜெர்க்ஸ், அதிர்வுகள், மற்றும் அதிர்ச்சிகளைப் பிரதிபலிக்கும் சிமுலேட்டர்கள் பற்றிய பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, விண்வெளி வீரர்கள் பணி-குறிப்பிட்ட பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர், இதன் ஒரு பகுதியாக அவர்கள் விண்கலம் மற்றும் அதன் செயல்பாடுகளை அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள விண்வெளி பயணத்திற்கு முன்னதாகவே அறிந்து கொள்கின்றனர்.
முன்னதாக வீரர்கள் ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள காகரின் காஸ்மோனாட் பயிற்சி மையத்தில் 2020-ல் பயிற்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.