சென்னை விமான நிலையத்தில், ரூ.2.50 கோடி மதிப்பிலான, 4.5 கிலோ கிராம் எடை கொண்ட தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் ஒரு சிலர் தங்கள் உடமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம், போதைப்பொருள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் உட்பட பல பொருட்களைக் கடத்தி வருகின்றனர். இதனை கண்டறிந்து சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து வரும் விமானத்தில், தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அபுதாபியில் இருந்து வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் யாரிடமும் எதுவும் இல்லை. பின்னர், விமானத்தில் உள்ள கழிவறையில் வயர்கள் செல்ல கூடிய அறை பகுதியை சோதனை செய்தனர். அதில், சந்தேகத்திற்குரிய வகையில், நம்பர் லாக்குடன் டேப் சுற்றப்பட்டு ஒரு பொருள் இருந்தது.
அந்த பொருளை பிரித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், சுமார் 4.5 கிலோ தங்க கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், தங்கத்தை கடத்தி வந்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.