தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் பார்வையாளர்களுக்கான சேவை மையத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவர் நிலையத்தில் உள்ள பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், 120 அடி உயர வரலாற்றுச் சிறப்புமிக்க கொடிமரம், ஜெய்ஹிந்த் படிக்கிணறு, சிறுவர் பூங்கா, பாறை தோட்டத்தில் உள்ள சிவன் தெய்வம், நந்தி காளை சிற்பங்கள் ஆகியவை பார்வையாளர்களுக்கு நமது நாட்டின் கலாச்சாரச் செழுமையை அறிந்து கொள்ள உதவுகின்றன என்று கூறினார்.
நமது வளமான பாரம்பரியத்துடன் மக்களை இணைப்பதற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க படியாக பார்வையாளர்களுக்கான சேவை மையம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் நிலையத்தில் பார்வையாளர்களுக்கான அனுபவத்தை இந்த வசதி மையம் மேலும் மேம்படுத்தும் என்றும், அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த மையம் அனைத்து பார்வையாளர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு பொன்னம் பிரபாகர் மற்றும் குடியரசுத் தலைவரின் செயலக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.