இந்தியாவில் வரவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற இந்திய உலக அமைப்பின் ஆண்டு முதலீட்டு உச்சி மாநாடு- என்எக்ஸ்டி10-ல் (NXT10) மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அமித் ஷா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் வரவிருக்கும் தேர்தல்கள் அடுத்த 25 ஆண்டுகளுக்கான நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், 2047-ஆம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும். இந்தத் தேர்தல்கள் ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, ஏழைகளின் நலன், பொது நலன், பாரம்பரியம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்கான திருவிழாவாகும்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா இன்று தன்னம்பிக்கை, தற்சார்பு ஆகியவற்றை நோக்கி முன்னேறி செல்கிறது. உறங்கிக் கிடந்த நிலையில் இருந்து, தற்போது துடிப்பான அரசை இந்தியா பெற்றுள்ளது. முற்போக்கான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. முந்தைய பலவீனமான பொருளாதாரத்தில் இருந்து, தற்போது பலமான பொருளாதாரத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று கூறினார்.