ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை உடனே சரி செய்யாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என பொது மக்கள் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தமிழக அரசு பணிந்துள்ளது.
தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலம், ஒவ்வெரு மாதமும் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை மற்றும் சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 பேர் பயன் பெற்று வருகின்றனர்.
மொத்தம் உள்ள குடும்ப அட்டைகளில், அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ், 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும், முன்னுரிமை பெற்ற 95.67 லட்சம் அட்டைகளும் உள்ளன. மேலும், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டமும் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பொது மக்கள் தங்களுக்குத் தேவையான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடை ஊழியர்கள் சீரான நேரத்தில் வழங்காமல் அலைகழிப்பதாகப் புகார் தெரிவித்து வந்தனர். இதனால், அன்றாடப் பணிகளைக் கவனிக்க முடியவில்லை என்றும் வேதனைப் பட்டனர்.
குறிப்பாக, தற்போது, வெயில் காலம் துவங்கிவிட்டதால், தமிழக அரசு தங்களது கோரிக்கை மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் இல்லையெனில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த நேரிடும் என்றும் எச்சரிக்கையும் விடுத்தனர்.
இந்த நிலையில், ஒரே தவணையில், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பொது மக்களின் போாரட்ட அறிவிப்பை அடுத்து தமிழக அரசு பணிந்துள்ளது.