கான் யூனிஸ் நகரில் 250 பாலஸ்தீன தீவிரவாதிகளை கைது செய்த இஸ்ரேல் இராணுவம், துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், வெடிமருந்துகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில், பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.
காஸாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து, தாக்குதல் நடத்தி வருகிறது. அப்பாவி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி இஸ்ரேல் இராணுவம் அறிவுறுத்தி உள்ளது.
ஹமாஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பதே இஸ்ரேலின் நோக்கமாக உள்ளது. இதனால், ஹமாஸ் தீவிரவாதிகளை தேடி கண்டுபிடித்து கைது செய்தும், கொன்றும் வருகிறது. அந்த வகையில், இஸ்ரேல் இராணுவம் 250 பாலஸ்தீன தீவிரவாதிகளை கான் யூனிஸ் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது.
கான் யூனிஸின் ஹமாத் டவர்ஸ் பகுதியில், ஹமாஸுக்கு எதிரான நடவடிக்கைகளில் இஸ்ரேல் இராணுவம் இறங்கி உள்ளது. அப்பகுதியில் இருந்த ஆயுதத் தொழிற்சாலையை இஸ்ரேல் இராணுவம் சோதனையிட்டது.
அங்கு மறைந்து இருந்த ஒரு ஹமாஸ் ஸ்னைப்பர் செல் கமாண்டர் மற்றும் இரண்டு ஹமாஸ் படை தளபதிகள் உட்பட பலர் இஸ்ரேல் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களை இஸ்ரேல் இராணுவம் கைது செய்தது.
கூடுதலாக, கலாஷ்னிகோவ் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிபொருட்கள், வெடிமருந்துகள் உட்பட ஏராளமான ஆயுதங்களை இஸ்ரேல் இராணுவம் கைப்பற்றியது. மேலும், பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத்துடன் தொடர்புடைய மற்ற தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.
ஹமாத் டவர்ஸ் என்பது கடந்த 2012-ஆம் ஆண்டு காஸா மோதலைத் தொடர்ந்து கத்தாரின் நிதியுதவியுடன் கட்டப்பட்டது. இது 40 கோபுரங்களைக் கொண்ட குடியிருப்புப் பகுதியாகும். 2016-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இங்கு ஆயுத உற்பத்தி நிலையம், சுரங்கப்பாதைகள் உள்ளன. இது ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரின் தனிப்பட்ட கோட்டையாகவும் கருதப்படுகிறது.