ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சி, பாஜக கூட்டணி அறிகுறியாக அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்காக, ஹைதராபாத்தில் இருந்து நேற்று டெல்லி சென்றார். பின்னர் நள்ளிரவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது பிரபல நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணும் உடனிருந்தார். இதில், கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் நடப்பு ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு போன்றவை குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜோத்ஸ்னா திருநாகர் கூறுகையில், “ஓரிரு நாட்களில் கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்” என்றார்.
பாஜக மேல்மட்ட தலைவர்களை சந்திப்பதற்காக, சந்திரபாபு நாயுடு டெல்லிக்கு செல்வது இது இரண்டாவது முறையாகும். ஆந்திரப் பிரதேச பாஜக தலைவர் டி. பூர்ணதேஸ்வரியும் ஏற்கெனவே டெல்லியில் முகாமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு தேசம் கட்சி பாஜகவுக்கு 5 அல்லது 6 மக்களவைத் தொகுதிகளையும், 15 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் வழங்க முன்வந்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தெலுங்கு தேசம் கட்சி ஏற்கெனவே, ஜனசேனா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. சமீபத்தில், தெலுங்கு தேசம்-ஜனசேனா கூட்டணி 99 வேட்பாளர்களுடன் முதல்கட்ட பட்டியலை வெளியிட்டது. அதன்படி, ஜனசேனா 24 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், 3 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.