தமிழகத்தில், ஆட்சியில் இருக்கும் திமுக ஆதரவில், போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், நமது வருங்காலச் சந்ததியினரான குழந்தைகளின் எதிர்காலமும் சீரழிகிறது எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர் பல ஆயிரம் கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தியதாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை வந்த பிரதமர் மோடி, போதைப் பொருள்கள் விற்பனை, பெரும் கவலையை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்தார். குழந்தைகளின் எதிர்காலத்தை அழிக்க நினைக்கும் இந்த போதைப் பொருள் கடத்தலுக்குத் துணைபோகும் கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் முழு ஆதரவுடன், பாஜக போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடையவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
இந்த நிலையில், கஞ்சா விவகாரத்தில், சென்னையில் இளைஞர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பூந்தமல்லி அடுத்து நசரேத்பேட்டை ஆறுமுகம் தெருவைச் சேர்ந்தவர் கருக்கா என்ற ஸ்டீபன் (23). இவரை நேற்று இரவு காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் கடத்திச் சென்றுள்ளது.
மாங்காடு அருகே உள்ள காலி மைதானத்தில் வைத்து, ஸ்டீபனை கழுத்து, கை, தலை, கால் எனப் பல இடங்களில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.
தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
படுகொலை தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த படுகொலை நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.