கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கிரெடிட் கார்டுகளில் மாஸ்டர் கார்டு, விசா, ரூபே, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பேங்கிங் கார்ப், டைனர்ஸ் கிளப் என நெட்வொர்க்குகளில் ஏதேனும் ஒன்றின் பெயர் இருக்கும்.
ஆனால், இந்த நெட்வொர்க்குகளை வாடிக்கையாளர்களே தேர்வு செய்ய முடியாது. காரணம், நெட்வொர்க்குடன் கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகளும், நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்து கொள்வதே. இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் புகார் எழுப்பினர்.
இந்த நிலையில், கிரெடிட் கார்டு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றி அமைத்துள்ளது.
அந்த வகையில், கார்டு நெட்வொர்க்குகளின் சேவையைப் பெறுவதற்கு, எந்த கார்டு நெட்வொர்க்குடனும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யக்கூடாது.
இனி, புதிய கிரெடிட் கார்டு வழங்கும்போது, கார்டு நெட்வொர்க்கை வாடிக்கையாளரே தேர்வு செய்து கொள்வதற்கான வாய்ப்பை அந்த நிறுவனங்கள் அளிக்க வேண்டும்.
பழைய வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டை புதுப்பிக்கும்போது, அவர்களுக்கு கார்டு நெட்வொர்க்கை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்க வேண்டும். இதனை ஆறு மாதங்களில் அமல்படுத்த வேண்டும்.
ஆனால், 10 லட்சம் அல்லது அதற்கு குறைவான கிரெடிட் கார்டுகளை வழங்கியுள்ள நிறுவனங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என தெரிவித்துள்ளது.