ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
பெண்கள் உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடையாளம் கண்டு சம உரிமைக்கான அவர்களது போராட்டத்தை ஊக்குவிக்க கூடிய ஒரு நாளாக இது அமைகிறது.
ஆண்களுக்கு நிகரான ஊதியம், படிப்பு மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகள் போன்ற பல்வேறு விஷயங்களில் பெண்கள் சந்தித்து வரும் சவால்களையும் வேறுபாடுகளையும் இந்த நாள் பறைசாற்றுகிறது.
1908 ஆம் ஆண்டு 15,000 பெண்கள் நியூயார்க் நகரத்தின் வழியாக குறுகிய வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றபோது அதன் விதைகள் வேரூன்றப்பட்டன.
ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது. 1975ம் ஆண்டு மார்ச் 8ம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையானது 2024 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளை ‘பெண்களில் முதலீடு செய்யுங்கள்: முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது, அதே சமயம் இந்த ஆண்டுக்கான பரப்புரைக் கருப்பொருள் ‘அனைவரையும் உள்ளடக்கும் பணியை ஊக்குவிக்கவும்’ என்பதாகும்.