குட்கா விவகாரத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீதான வழக்கு விசாரணை வரும் 21 -ம் தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு சென்னை அடுத்த செங்குன்றத்தில், வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல உண்மைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், குட்கா விற்பனை செய்யும் விவகாரத்தில், தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
சிபிஐ வழக்கு அடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 27 பேர் மீதும், நான்கு நிறுவனங்கள் மீதும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, சிபிஐ தாக்கல் செய்ய உள்ள கூடுதல் குற்றப் பத்திரிக்கைக்குப் பின்னர், தங்களது தரப்பு விசாரணை நடைபெறும் என்று அமலாக்கத்துறை தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா உத்தரவிட்டார்.