மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம் புரி கடற்கரையில் உள்ள கரையோர மணலை பயன்படுத்தி சிவபெருமானை மணற் சிற்பமாக வடிவமைத்துள்ளார்.
உலக அமைதி வேண்டி மகா சிவராத்திரி தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒடிசா பூரி கடற்கரையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 500 சிறிய சிவலிங்கங்களால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானின் அற்புதமான திருவுருவத்தை வடிவமைத்துள்ளார்.
மணலில் 9 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்டு 23,436 ருத்ராட்ச மணிகளால் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானை வடிவமைத்தார். மேலும் இந்த சிற்பத்தில் முதன் முறையாக ருத்ராட்ச மணிகளை பயன்படுத்தியுள்ளார். 12 டன் மணல் கொண்டு சுமார் 6 மணி நேரம் வடிவமைத்துள்ளார்.
அவருடையை மணல் சிற்ப பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சுதர்சனுக்கு உதவி செய்தனர். அதில் அமைதிக்காக பிரதிக்கிறோம் என்று வாசகத்தை எழுதி உலக அமைதியை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த சிற்பங்களை வடித்துள்ளார்.
அவரது இந்த தலைசிறந்த படைப்பு மூலம், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு அமைதி, ஒற்றுமை மற்றும் பக்தியை எடுத்துக்காட்டுகிறார்.