தமிழகத்தின் புனித மலைகளில் ஒன்றான பருவதமலையில், பக்தர்களின் தரிசனத்திற்கு வசதியும், மலைகளில் சமூக விரோதிகளை ஒடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளயிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே சுமார் 4,500 அடிகள் கொண்ட பருவதமலை மலைக்கோயில் உள்ளது. பௌர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த மலைக்கோயில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிக்க வருகை தருகின்றனர். மலையை சுற்றி அரிய வகை மூலிகைகளும் விலை உயர்ந்த மரங்களும் சூழ்ந்து இயற்கை எழில் நிறைந்த மலையாக இது விளங்குகிறது.
இந்த நிலையில், பர்வதமலையில் சமூக விரோதிகள் இந்த மலைக்கு தீ வைத்து உள்ளனர். இதனால், இந்த மலையில் வாழும் உயிரினங்களும் அரிய வகை மூலிகை செடிகளும் விலையுர்ந்த மரங்களும் எரிந்து சாம்பல் ஆகியுள்ளன.
இந்து அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த மலைக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மலையில் தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதியோ கழிப்பட வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. இதனால் பக்தர்கள் கைகளில் கொண்டு வரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் வீசி எறிவதால் மலையில் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைந்துள்ளது.
மேலும், இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளும் மலைக்கு சென்று சில சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை காவல்துறையும் வனத்துறையும் கண்டு கொள்வதில்லை. இந்து அறநிலைத்துறை இங்கு வரும் பக்தர்களிடையே பணம் வசூலிப்பது குறியாக உள்ளதே தவிர மலைக்கோவில் முன்னேற்றத்திற்கான எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தருவதில்லை.
தொடர்ந்து, இந்த மலையை சுற்றியுள்ள மலைகளிலும் தீ வைப்பது தொடர் வாடிக்கையாக உள்ளது. இதை மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் கண்டு கொள்வதில்லை. உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை இந்தப் பகுதியிலே ஒரு சோதனை சாவடிகளை அமைத்து இது போன்ற சமூக விரோதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தமிழக அரசு உடனே தலையிட்டு இயற்கை எழில் நிறைந்த இந்த மலைகளை குறி வைத்து தீ வைக்கும் சமூக விரோதிகளை கண்டறிந்து கைது செய்து மலைகள் உள்ள அரிய வகை மூலிகைகளையும் மரங்களையும் உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.