மகா சிவராத்திரி நாடு முழுவதும் இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய பண்டிகையாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.
அதாவது, பிரளய காலத்தில் அம்பாள் இரவு பொழுதில் நான்கு ஜாமங்களிலும், ஆகம விதிப்படி பரமேஸ்வரனை நினைத்து இரவு முழுவதும் பூஜை செய்தார். அதனால், இந்த இரவை சிவநாமத்தாலேயே சிவராத்திரி என்று தேவரும் மனிதரும் கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.
சிவராத்திரி அன்று சூரியன் மறைந்தது முதல் மறுநாள் சூரியன் உதயமாகும் வரை சிவபூஜை செய்வது வழக்கம். எவராக இருந்தாலும் அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் அருள வேண்டும் என்று அன்னை உமாதேவி வேண்டினார். அதற்கு பரமேஸ்வரனும் அப்படியே ஆகட்டும் என்று அருள் புரிந்தார். ஆதலால், மகா சிவராத்திரி இரவு முழுவதும் சிவபூஜை செய்யும் அனைவருக்கும் அனைத்து பாக்கியங்களும் சிவனருளால் கிடைக்கும்.
சிவராத்திரி மாலை ஆறு மணிக்கு குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்று அல்லது தங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையின் தனிமையில் அமர்ந்து சிவ சிந்தனையில் லயித்தலே சிவனே நேரில் வருவார்.
எண்ணற்ற பறவைகளை கொன்ற வேடன் வில்வ அபிஷேகம் செய்து பாவ விமோசனம் பெற்ற நாள் சிவராத்திரி. எனவே, சிவராத்திரியில் சிவனை வழிபட்டால், தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பிழைகள் அனைத்தும் சிவனருளால் பொசுங்கிவிடும்.
சிவராத்திரி அன்று கோளறு பதிகம், லிங்காஷ்டகம் பஞ்சாட்சர ஸ்தோத்திரம் நடராஜர் பத்து பரமசிவன் ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது மிக அற்புதமான பலன்களை தரும். மேலும், சிவராத்திரி அன்று பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தால் மற்ற நாட்களில் 100 கோடி முறை பஞ்சாட்சரம் ஜபித்த பலன் கிட்டும்.
கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள், தங்களது வீட்டிலேயே சிவபெருமான் படத்தை வைத்து அதன் முன் தீபம் ஏற்றிவைத்து ஒரு சின்ன பாத்திரத்தில் தூயநீர் வைத்து – ஏதேனும் ஒரு பழம் வைத்து வில்வ இலைகளையும் வைத்து திருவாசகத்தில் சிவபுராணம் முதல் 51 பதிகங்களையும் பக்தியுடன் பாராயணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு பதிகத்திற்கும் ஒரு வில்வ இலை வைத்து பூஜித்தாலே அனைத்துப் பலன்களும் கிடைக்கும்.