மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் 15வது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் உ.பி. வாரியர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடியது.
இதில் டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 6 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 59 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அலிசா 29 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, கிரேஸ் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்தது.
அதேபோல் டெல்லி அணியில் அதிகபட்சமாக ராதா யாதவ் மற்றும் டைட்டாஸ் சாது ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அதேபோல் ஷிகா, அருந்ததி, ஆலிஸ் கேப்ஸி, ஜெஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி. இதில் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் மேக் லானிங் 46 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய ஷாபாலி வர்மா மற்றும் ஆலிஸ் கேப்ஸி ஆகியோர் தலா 15 ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனாலும், 18 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் என்ற நிலையில் இருந்தது டெல்லி கேபிடல்ஸ்.
டெல்லி அணிக்கு கடைசி 2 ஓவர்களில் 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 19வது ஓவரை தீப்தி சர்மா வீசினார்.
அவர் முன்னதாக வீசிய ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தி இருந்தார். அத்துடன் 19வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்கள் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.
அதே ஓவரின் நான்காவது பந்தில் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். 19வது ஓவரின் முடிவில் 129 ரன்களுக்கு 7 விக்கெட் என்ற நிலையில் இருந்தது டெல்லி.
அடுத்ததாக 6 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது கடைசி ஓவரில் வந்தபோது கிரேஸ் களத்தில் இறங்கினார். கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்தார் ராதா யாதவ். இரண்டாவது பந்தில் 2 ரன்கள் கிடைத்தது. இன்னும் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது டெல்லி அணி.
கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ராதா யாதவ் பவுல்டு அவுட் ஆனார். நான்காவது பந்தில் ஜெஸ் ரன் அவுட் ஆனார். ஐந்தாவது பந்தில் டிடாஸ் சாது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 137 ரன்களுக்கு ஆல் – அவுட் ஆனது டெல்லி கேபிடல்ஸ் அணி.
இதை அடுத்து 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது உபி வாரியர்ஸ். 11 பந்துகளில் 6 விக்கெட் வீழ்த்தி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது உபி வாரியர்ஸ்.
உ.பி. அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா 4 விக்கெட்களை வீழ்த்தினார். சைமா மற்றும் கிரேஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். சோஃபி எக்லெஸ்டோன் 1 விக்கெட் வீழ்த்தினார். மேலும் இந்த போட்டியில் ஆட்டநாயகி விருது உ.பி. அணியின் தீப்தி ஷர்மாவுக்கு வழங்கப்பட்டது.