குரூப்-1 பணிகளுக்கு வரும் 26 -ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நேர்காணல் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிக வரிகள் உதவி ஆணையர் உள்ளிட்ட 95 பதவிகளுக்கு குரூப்-1 மெயின் தேர்வு முடிவு கடந்த 7-ம் தேதி வெளியானது.
இந்த நிலையில், நேர்காணல் வரும் 26 -ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ளார்.
நேர்காணல் நிறைவு பெற்ற பின்னர், அதில் பெற்ற மதிப்பெண், மெயின் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். இதனைத் தொடர்ந்து, அதில் இருந்து 95 பேர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.
குரூப்-1 தேர்வு மூலம் பணியில் சேர்பவர்கள் குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.