தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத் தேர்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆன விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில், 3,58,201 மாணவர்களும், 4,13,998 மாணவியர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும், இவர்கள் தவிர தனித் தேர்வர்கள் 21,875 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் இதற்கான தேர்வு நடைபெறுகிறது. நேற்று அரசியல் அறிவியல், கணினி அறிவியல், உயிரி வேதியியல், புள்ளியியல் உள்ளிட்ட 11 பாடங்களுக்குத் தேர்வு நடைபெற்றது. இதில், 5 ஆயிரத்து 144 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்குப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு தொடங்கிய முதல் நாளே 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.