பாரத பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்தில் சேலா சுரங்கப்பாதையை இன்று திறந்து வைத்தார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் இட்டாநகரில் நடந்த ‘விக்சித் பாரத் – விக்சித் வடகிழக்கு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதையான சேலா சுரங்கப்பாதையை இன்று திறந்துவைத்தார்.
825 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதை, சீனாவுடனான உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு (எல்ஏசி) அருகே உள்ள தேஜ்பூரை தவாங் பகுதியுடன் இணைக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்த சேலா சுரங்கப்பாதை பற்றிய 6 தகவல்கள் குறித்து பார்ப்போம் :
1. சேலா சுரங்கப்பாதை 13,000 அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக நீளமான இருவழிச் சுரங்கப்பாதையாகும்.
2. இதில் ஒரு சுரங்கப்பாதை 1003 மீட்டர் நீளமும், மற்றொரு சுரங்கப்பாதை 1,595 மீட்டர் நீளமும் கொண்டது. இந்த சுரங்கப்பாதையில் அதிக சக்தி கொண்ட மின் விளக்குகள், தீயணைப்பு வசதிகள். காற்று வசதி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளது. இந்த சுரங்கப்பாதையால் தவாங்-டராங் இடையே பயண நேரம் ஒரு மணி நேரம் குறையும்.
3. இரு வழி சுரங்க பாதைகளில் ஒன்று போக்குவரத்து தேவைகளுக்காகவும், மற்றொன்று அவசரகால சேவைகளுக்காகவும் உபயோகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதைகளுக்கு இடையேயான இணைப்புச் சாலை 1,200 மீட்டர் நீளம் கொண்டது.
4. எந்த மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் போக்குவரத்து பாதிக்காத வகையில் இந்த சுரங்கப்பாதை அமைந்துள்ளது. ஆஸ்திரிய சுரங்கப்பாதை முறையை பயன்படுத்தி இந்த பிரமாண்ட சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.
5. இந்திய சீன எல்லையில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்தை நிறைவேற்ற சுமார் 90 லட்சம் மணி நேரங்களுக்கும் அதிகமான வேலை நேரம் தேவைப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக தினமும் சராசரியாக 650 தொழிலாளர்கள் இந்த சுரங்க பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
6. சேலா கணவாய்க்கு கீழே 400 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சேலா சுரங்கப்பாதை குளிர்காலத்தில் கூட ஒரு முக்கிய பாதையை வழங்குகிறது. இந்தச் சுரங்கப்பாதையானது ராணுவ துருப்புக்கள், ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களை விரைவாக சீன-இந்திய எல்லையில் கொண்டு செல்ல உதவுகிறது என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
சிறப்புமிக்க இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்து பேசுகையில், காங்கிரஸ் 20 ஆண்டுகளில் செய்ததை பா.ஜ.க. 5 ஆண்டுகளில் செய்து முடித்துள்ளது என தெரிவித்தார்.