பாலஸ்தீனத்தின் காஸா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை இஸ்ரேல் தொடங்கியது. இந்த போரில் விமானப்படை, கப்பல்படை, தரைப்படை என முப்படைகளையும் ஏவிவிட்டு நடத்தி வரும் தாக்குதலில் காஸா நகரமே உருக்குலைந்து போய்க் கிடக்கிறது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில், பேரழிவை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போரில் ஏமனில் செயல்படும் ஹவுதி தீவிரவாதிகள், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால், செங்கடல் வழியாக செல்லும், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் காரணமாக, முக்கிய வர்த்தக பாதைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் கூட்டுப்படை, ஹவுதி தீவிரவாதிகளின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இருந்தபோதிலும், ஹவுதி தீவிரவாதிகள் அதைக் கண்டு கொள்ளாமல், செங்கடலில் வரும் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஏமன் நாட்டில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் தாங்கிய இரண்டு கனரக வாகனங்களுக்கு எதிராகத் தான் தற்காப்புத் தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்க ராணுவம் மார்ச் 8ஆம் தேதியன்று தெரிவித்தது.
இதுகுறித்து எக்ஸ் தலத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. அதில் ‘புரோபெல் ஃபோர்சுன்’ என்ற சிங்கப்பூர் கொடி தாங்கிய, சிங்கப்பூருக்குச் சொந்தமான வர்த்தகக் கப்பலை நோக்கிப் பாய்ச்சப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் இல்லை என்றும் சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, செங்கடல் பகுதியில் ஏமனின் ஹூதி படையினர் பாய்ச்சிய 15 ஆளில்லா வான்வழி வாகனங்களை, அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களும் விமானங்களும் சுட்டு வீழ்த்தியதாக மார்ச் 9ஆம் தேதியன்று அமெரிக்க மத்திய தளபத்தியம் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.
முன்னதாக கடற்கொள்ளையர்களிடம் இருந்து இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுமித்ரா போர்க்கப்பல் துரிதமாக செயல்பட்டு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 19 பேரை பத்திரமாக மீட்டது.