மாசி அமாவாசையை முன்னிட்டு, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபட்டனர்.
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவில், 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்று என்பதால், ஒவ்வொரு ஆண்டும், மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழாக்கள் 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றுடன் தொடங்கியது.
விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமையன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா சிவராத்திரி திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், மாசி அமாவாசையை முன்னிட்டு, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி விட்டு கடற்கரையில் அமர்ந்து மறைந்த தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டனர்.
இதன்பின் இராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடினார். தொடர்ந்து, இராமநாத சுவாமி மற்றும் அம்பாள் பர்வதவர்த்தினினையை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
அமாவாசையை முன்னிட்டு, சுவாமி-அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து, வீதி உலா நடைபெற்றது. பின்னர் சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் எழுந்தருளி தீர்த்த வாரி நடைபெற்றது.