கொடைக்கானலில் உள்ள குணா குகை எனப்படும் டெவில்ஸ் கிட்சேன் குகையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து மஞ்சுமேல் பாய்ஸ் என்ற மலையாள படம் கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் வெற்றிகரமாக ஓடுகிறது.
இப்படத்தை சிதம்பரம் எஸ்.பொடுவேல் என்பவர் இயக்கியுள்ளார். சோபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம், தமிழகத்தில் உள்ள கொடைக்கானலில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும் 101 நாட்களுக்குள் இதன் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இப்படம் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இப்படம் ஒரு உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
மஞ்சுமெல் பாய்ஸ் கதை :
கேரள மாநிலதை சேர்ந்த நண்பர்கள், கொடைக்கானலுக்கு சுற்றுலாவிற்காக வருகின்றனர். அப்படி வருகையில், குணா படம் எடுக்கப்பட்ட குணா குகைக்கும் செல்கின்றனர். அதில், தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் அவர்களுள், ஒரு நண்பர் மட்டும் அக்குகையின் ஆபத்தான பகுதிக்குள் சிக்கி கொள்கிறார். அவரின் நிலை என்ன ஆனது? அவரை உயிருடன் மீட்டனரா? என்பதே இப்படத்தின் கதை.
உண்மையான மஞ்சுமெல் பாய்ஸ் கதை :
2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவை சேர்ந்த சில நண்பர்கள் சுற்றுலா வந்தனர். அப்போது அவர்களில் சுபாஷ் என்பவர் 100 அடி ஆழ பள்ளத்தில் கால் தடுமாறி விழுந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு இந்த இடத்தில் விழுந்தவர்கள் யாருமே இதுவரை பிழைத்ததில்லை. எனவே நீங்களும் நண்பரை மறந்துவிட்டு சொந்த ஊருக்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.
ஆனாலும் பிடிவாதமாக இருந்த சுபாஷின் நண்பர்கள் தனது நண்பனை மீட்ட பிறகுதான் போவோம் என உறுதியாக இருந்தனர். தீயணைப்புத் துறையினர் குகைக்குள் இறங்க தயக்கம் காட்டினர்.
அப்போது சுபாஷின் நண்பர் சசி என்பவர் நான் இறங்குகிறேன் என முன் வந்தார். அவருடைய மற்ற நண்பர்களும் தீயணைப்புத் துறையினரும் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை. பிறகு கயிற்றை கட்டிக் கொண்டு சசி இறங்கினார்.
60 அடி ஆழத்தில் சென்ற போதுசுபாஷ் ஒரு பாறை மீது விழுந்து கிடப்பதைப் பார்த்த அவர் தனது நண்பர் உயிருடன் தான் இருப்பதாக சத்தம்போட்டார்.
பின்னர் சுபாஷை சசி தனது உடலுடன்இறுக்கமாக கட்டிக் கொண்டார். அவர்களை தீயணைப்புப் படையினர் மெதுவாக மேலே இழுத்தனர்.
மயங்கியநிலையில் இருந்த சுபாஷுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 5 மணி நேரப் போராட்டத்துக்குப்பின்னர், சுபாஷ் பத்திரமாக மீட்கப்பட்டதால் அவரது நண்பர்கள் சந்தோஷமடைந்தனர்.
இதையடுத்து சுபாஷை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சுபாஷுக்கு நடந்தது என்ன என அவரது வீட்டில் கூட நண்பர்கள் சொல்லாமல் மறைத்து அருவியில் இருந்து அவர் விழுந்ததால் காயம் என்று மட்டுமே சொல்லியிருந்தனர். இது தான் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் உண்மையான கதையாகும்.