2025 ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு வீரர்களுக்கான மெகா ஏலம் நடத்தப்படும் என ஐபிஎல் தலைவர் அருண் துமல் உறுதியளித்துள்ளார். இதில் ஒவ்வொரு அணியும் 4 வீரர்கள் வரை தக்க வைக்கலாம்.
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது.
இந்த வருடம் நடக்க இருக்கும் ஐ.பி.எல் தொடர் மெகா ஏலத்திற்கு பிறகு நடக்கும் மூன்றாவது ஐ.பி.எல் தொடர் ஆகும். ஐ.பி.எல் தொடரில் வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடப்பது வழக்கம்.
இந்நிலையில் தற்போது 2025 ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு வீரர்களுக்கான மெகா ஏலம் நடத்தப்படும் என ஐபிஎல் தலைவர் அருண் துமல் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” நிச்சயமாக நாங்கள் அடுத்த வருடம் மெகா ஏலத்தை நடத்துவோம். ஒவ்வொரு அணியும் மூன்று முதல் நான்கு வீரர்களை தக்க வைக்கலாம். இதன் மூலமாக புதிய அணிகள் உருவாக்கப்படும். இது ஐ.பி.எல் தொடரை மேலும் சுவாரசியமாக மாற்றும்.
இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஐ.பி.எல் தொடர் மூலமாக புதிய திறமைகளை நாங்கள் கொண்டு வந்ததை போலவே உதாரணமாக ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டிலிருந்து கிரிக்கெட் திறமைகளை கொண்டு வந்ததை போல் எப்பொழுதும் கொண்டு வருவோம். இதனால் எல்லா கிரிக்கெட் நாடுகளும் பலனடைந்து இருக்கின்றன.
இந்த முறை சவால் என்னவென்றால், ஜூன் முதல் வாரத்தில் டி20 உலகக் கோப்பை நடக்கிறது. எனவே நாங்கள் ஐ.பி.எல் தொடரை மே 25 அல்லது 26 ஆம் தேதிக்குள் முடித்தாக வேண்டும்.
அப்பொழுதுதான் இந்திய அணி அமெரிக்கா போன்ற ஒரு புதிய சூழ்நிலையில் சென்று தங்கி பழகி விளையாடுவதற்கு வசதியாக இருக்கும்” என்று கூறினார்.