சர்வதேச கடல் வழியில் செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள் ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள். இந்நிலையில், ஹூதி கிளர்ச்சியாளர் என்றால் யார் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஹூதி கிளர்ச்சியாளர்கள் குழு, ஷியா முஸ்லீமின் துணைப் பிரிவான ஜைதிகள் பிரிவை சேர்ந்த ஆயுதமேந்திய குழுவாகும். ஹூதிகள் இயக்கத்தை நிறுவிய ஹுசைன் அல்-ஹூதி என்பவரை நினைவு கூறும் வகையில் அந்த குழு ஹூதி கிளர்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வமாக அன்சார் அல்லா என்று அழைக்கப்படும் ஹூதி இயக்கம், 1990ஆம் ஆண்டுகளில் ஏமனில் தோன்றிய ஒரு ஷியா இஸ்லாமிய அரசியல்-இராணுவ அமைப்பாகும். மேலும் இந்த குழு ஈரானின் ஆதரவுடன் இயங்கி வருகிறது.
1990 ஆம் ஆண்டுகளில் அப்போதைய ஏமன் அதிபர் அலி அப்துல்லா சாலேவின் ஊழல் அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது.
சன்னி இஸ்லாமியர்களிடம் இருந்து ஆட்சியை பிடித்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவிற்கு எதிராக இயங்க நினைப்பதே ஹூதிகளின் தற்போதைய முக்கிய குறிக்கோளாகும்.
இந்நிலையில், சமீபகாலமாக ஹூதி போராளிகள் சர்வதேச கடல் வழிகளில் கொள்ளையடிப்பது, கப்பல்களை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏமன் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மத்திய வட அரபிக்கடல் ஆகிய பகுதிகளை கடந்து செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து கடந்த சில வாரங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனால் இந்திய கடற்படை அரபிக்கடலில் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தியுள்ளது. மேலும் இந்திய கடற்படை பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை அவர்களிடம் ருந்து காப்பற்றியும் உள்ளது.
மேலும், ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஏமன் நாட்டை சேர்ந்த ஹூதி இயக்கத்துடன் தொடர்புடைய இடங்கள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளன.
ஏமன் அரசை வீழ்த்திய பின்னர், 2014 முதல் ஹூதி கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போரில் போராடி வருகின்றனர்.
2022 வரை இந்த போரினால் 377,000 பேர் பலியாகியுள்ளனர். கிட்டத்தட்ட நான்கு மில்லியன் மக்கள் இதனால் இடம்பெயர்ந்துள்ளனர்.
சவுதி அரேபியா இராணுவத்தின் ஆதரவுடன், அதிபர் சலே 2003 ஆம் ஆண்டு அந்த கிளர்ச்சிக் குழுவை அகற்ற முயன்றார், ஆனால் ஹூதிகள் அந்த முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தனர்.
ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா போன்ற பிற பயங்கரவாத அமைப்புகளை போலவே இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான குழுவாக ஹூதிகள் இயங்கி வருகின்றனர்.