மதுரை மாடக்குளம் அருகே கபாலீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயை, நீண்ட நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த கபாலீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் அமைந்துள்ள வனப்பகுதியில், திடீரென தீ பற்றி எரிந்தது. தீ அருகில் உள்ள மரங்களுக்கும் மளமளவென பரவியது. இதனால், அப்பகுதி முழுவதுமே புகை மூட்டம் சூழ்ந்து காட்சியளித்தது.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடுமையான வெயிலின் காரணமாக, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.