ஓர் ஆண்டில் 75% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரருக்கு ஒரு போட்டிக்கு ₹45 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
இதை தொடர் முடிவடைந்ததும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் ஊக்கத்தொகை திட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்தார்.
அதாவது தற்போது ஐபிஎல் போன்ற டி20 தொடர்களின் வருகையால் பல வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை.
அதன் உச்சமாக இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு ரஞ்சி கோப்பையில் விளையாடுங்கள் என்று ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிசான் ஆகிய 2 வீரர்களை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ஜெய் ஷா ஆகியோர் கேட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் அதை செய்யத் தவறியதால் அவர்களை 2023 – 24 இந்திய அணியின் மத்திய சம்பளப் பட்டியலில் இருந்து பிசிசிஐ அதிரடியாக நீக்கியது.
அதைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்காக தற்போது பிசிசிஐ இந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி ஒரு வருடத்தில் இந்தியாவுக்காக 75% மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு சம்பளத்துடன் ஒரு போட்டிக்கு 45 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
மேலும் அதே 75% போட்டிகளில் தேர்வாகி பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கும் 22.5 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளது.
அத்துடன் 50% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு போட்டி ஒன்றுக்கு 30 லட்சம் ஊக்கத் தொகையும் பெஞ்சில் இருக்கும் வீரர்களுக்கு 15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. அது போக 50% குறைவான போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கும் 15 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு ஏற்கனவே கொடுக்கும் சம்பளத்தை தாண்டி 40 கோடிகளை அதிகமாக பிசிசிஐ வழங்கவுள்ளது.
மேலும் இந்த திட்டம் 2022 – 23 சீசன் முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். இந்நிலையில் கிரிக்கெட்டை காப்பாற்றுவதற்கு ஜெய் ஷா போன்ற தலைவர்கள் ஒவ்வொரு நாட்டு வாரியத்திலும் இருப்பது அவசியம் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.