மகளிர் பிரீமியர் லீக் தொடரில் டெல்லிக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் 17வது போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ஜெமிமா 58 ரன்களை அடித்தார். அதேபோல் ஆலிஸ் கேப்ஸி 48 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அதேபோல் மெக் லானிங் 29 ரன்களிலும், ஷாபாலி வர்மா 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஷ்ரேயன்கா படேல் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல் சோபனா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதை தொடர்ந்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
இந்த அணியின் தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனையான சோஃபி மோலினக்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் சோஃபி டெவின் – ரிச்சா கோஷ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சில ஓவர்கள் நிதானம் காட்டிய இருவரும், 15வது ஓவரில் விஸ்வரூபம் எடுத்தனர்.
அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் விளாசப்பட, ஆர்சிபி அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி 3 ஓவரில் ஆர்சிபி வெற்றிக்கு 40 ரன்கள் தேவை என்ற நிலை வந்தது.
அப்போது டெவின் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, பொறுப்பை ரிச்சா கோஷ் எடுத்து கொண்டார். இதனால் கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவையாக இருந்தது.
ஷிகா பாண்டே வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி உட்பட 11 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவையாக இருந்தது. கடைசி ஓவரின் முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கப்பட, 4வது பந்தில் 2 ரன்களும், 5வது பந்தில் மீண்டும் ஒரு சிக்சரும் விளாசப்பட்டது.
கடைசி பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ரிச்சா கோஷ் முதல் ரன்னை எடுக்க ஓடிய போது ரன் அவுட் செய்யப்பட்டார்.
29 பந்துகளில் 3 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 51 ரன்கள் எடுத்த ரிச்சா கோஷ், ஆர்சிபி அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை என்று கண்ணீர் சிந்தினார்.
இதனையடுத்து அவருக்கு டெல்லி அணியின் ஜெமீமா ரோட்ரிக்ஸ் ஆறுதல் கூறினார். இந்த வெற்றியின் மூலமாக டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.