பாஜகவுடன் மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீட்டை இறுதிசெய்ய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என தமிழக மக்கள் முன்னேற்றம் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஓரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணியை பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றம் கட்சி உள்ளிட்ட கட்சிகளை பாஜக தங்கள் அணியில் இணைத்துள்ளது.
இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொகுதி பங்கீடு குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் தமிழக மக்கள் முன்னேற்றம் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் சந்தித்து பேசினார்.
பாஜகவிடம் ஒரு மாநிலங்களவை சீட், ஒரு மக்களவை தொகுதி கேட்டுள்ளோம் என ஜான் பாண்டியன் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீட்டை இறுதிசெய்ய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எத்தனை தொகுதியில் போட்டி என்பதை விரைவில் அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.