போலியான புகார் அளித்தாக, உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் துறவி ஷிப்ரா பதக் மீது பரமக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தனது தந்தை மற்றும் சகோதரருடன் நடைப்பயணமாக வந்து கொண்டிருந்தார் ஷிப்ரா பதக் (38) என்ற இளம் பெண் துறவி.
இந்த பெண் துறவி, பரமக்குடியில் இருந்து சத்திரக்குடி வழியே சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த அடையாளம் தெரியாத 8 பேர் தன்னிடம் தகராறு செய்ததாகப் புகார் தெரிவித்தார்.
மேலும், தனது காரின் இடது பக்க கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் சேதப்படுத்தி விட்டதாகவும் பரமக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், பெண் துறவி ஷிப்ரா பதக் புகாரின் பேரில் பரமக்குடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், பெண் துறவி அளித்தது பொய் புகார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, பொய் புகார் அளித்ததாகக் கூறி, பெண் துறவி ஷிப்ரா பதக் மீது பரமக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.