கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஶ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் மறைவுக்கு, ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக மாநிலத் தலைவர் ஆ. ஆடலரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ் தென் தமிழக மாநிலத் தலைவர் ஆ. ஆடலரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஶ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் முக்தி அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.
இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் ஈர்க்கப்பட்டு, கோவையில் காமாட்சிபுரி ஆதீனத்தை உருவாக்கி இறை பணியோடு சமூகப்பணியையும் மேற்கொண்டு வந்தவர் தவத்திரு காமாட்சிபுரி ஆதீனம் அவர்கள்.
கோவை உள்ளிட்ட தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான திருக்கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்துள்ளார். ஆதரவற்ற குழந்தைகளுக்கான அன்பு இல்லங்களை நடத்தி வந்த சுவாமிகள், இந்து சமுதாயத்திற்கு பிரச்சனைகள் வரும்போது நேரடியாக களத்தில் இறங்கி போராடவும் தயங்காதவர்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்துடன் இணைந்து பணியாற்றிவந்த சாக்த ஶ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகளின் திடீர் இழப்பு இந்து சமுதாயத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.
அவரது பிரிவால் வாடும் பக்தர்கள், ஆதீனத்தைச் சேர்ந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பூஜ்ய ஸ்வாமிகளின் ஆத்மா இறைவனின் திருவடிகளில் இளைப்பார பிரார்த்தனை செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.