மும்பை தொடர் குண்டு வெடிப்பின் 31-வது ஆண்டு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த 1993 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையின் பல்வேறு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. மும்பை பங்குச் சந்தைக் கட்டிடம், மஸ்ஜித்-மாண்ட்வி கார்ப்பரேஷன் வங்கிக் கிளை, ஜவேரி பஜார், பிளாசா சினிமா, கதா பஜார், செஞ்சுரி பஜார், ஹோட்டல் சீ ராக் உள்ளிட்ட 13 இடங்களில் பிற்பகல் 1:30 மணி முதல் 3:40 மணி வரை தொடர்ந்து குண்டுகள் வெடித்தன.
இந்த கொடிய தாக்குதலில் 257 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் முதல்முறையாக ஆர்டிஎக்ஸ் என்ற வெடிபொருள் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த தொடர் குண்டுவெடிப்பை டைகர் மேமனின் உதவியுடன் நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் நடத்தினான். மேமன் மும்பையில் உள்ள தனது குடியிருப்புகள் மற்றும் கேரேஜ்களை தீவிரவாத நடவடிக்கைகளுக்கு அனுமதித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு மூலம் மும்பை தாதாவாக அறியப்பட்ட தாவூத் இப்ராகிம் சர்வதேச தீவிரவாதியாக உருவெடுத்தான்.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதற்கு பழிவாங்க தாவூத் இப்ராகிமும், டைகர் மேமனும் மும்பையில் தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் பல இடங்களில் கூட்டங்களை நடத்தி, துபாய் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கி மும்பையில் குண்டுகள் புதைக்கப்பட்டு பின்னர் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டது.