பாகிஸ்தான் இந்துக்கள் இப்போது சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கி உள்ளதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து, 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லீம் நாடுகள் என்பதால், சிஏஏ சட்டத்தில் முஸ்லீம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்தது.
இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்காக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா தனது எக்ஸ் பதிவில், பாகிஸ்தான் இந்துக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதற்காக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.