பாஜக மத்திய தேர்தல் குழுவின் 2வது ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் 7 மாநிலங்களில் போட்டியிடக் கூடிய 90 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் 2 ஆம் தேதியன்று பாஜக 195 வேட்பாளர்கள் கொண்ட மக்களவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் 34 பேர் மத்திய, மாநில அமைச்சர்கள். இருவர் முன்னாள் முதல்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் டெல்லியில் பாஜக மத்திய தேர்தல் குழுவின் 2வது ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பிரஹலாத் ஜோஷி, நித்யானந்த் ராய், எம்.பி.க்கள் சுஷில் மோடி, சிஆர் பாட்டீல், தெலங்கானா மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டி, இமாச்சலப் பிரதேசத்தின் மூத்த தலைவர் ஜெய்ராம் தாக்கூர், கர்நாடகா முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, கர்நாடக மாநில பாஜக தலைவர் விஜேந்திரா எடியூரப்பா, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், குஜராத் முதல்வர் பூபேந்திரா பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடாகா, பிஹார், இமாச்சலப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
பிஹார், தமிழ்நாடு, ஒடிசாவில் இன்னும் பாஜக கூட்டணி இறுதியாகாத நிலையில் வேட்பாளர்கள் அறிவிப்பு இம்மாநிலங்களில் கொஞ்சம் தாமதமாகும் எனவும் தெரிகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பாஜக, தெலுங்கு தேசம், ஜனசேனா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு நிறைவுபெற்றது. ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 17 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியும், பாஜக 6 தொகுதிகளிலும் ஜனசேனா 2 தொகுதிகளிலும் போட்டியிடுவது என உடன்பாடு எட்டப்பட்டது. அதேபோல், ஆந்திராவில் உள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 144 தொகுதிகளிலும் ஜனசேனா 21 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும் போட்டியிடும் என ஒப்பந்தம் இறுதியானது.
2019 மக்களவைத் தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 303 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்றது. இந்நிலையில் இத்தேர்தலில் பாஜக 400 இடங்களை குறிவைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.