கடந்த 2021-ம் ஆண்டு சிறப்பு டிஜிபி-யாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். இவர் பெண் எஸ்.பி. ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது.
அதன்பேரில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதனால், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20,500 அபராதம் விதித்து விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் அவரைக் கைது செய்ய முயன்ற போது, தலைமறைவாகிவிட்டார். இதனால், வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாமல் இருக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் தங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அங்கு சிபிசிஐடி போலீசார் முகாமிட்டுள்ளார். இதனால், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என தெரிய வந்துள்ளது.