குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே ரூ.480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த 6 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
இந்தியாவில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானில் இருந்து அடிக்கடி சட்டவிரோதமாக கடல் வழியாக போதைப்பொருள் கடத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடலோர காவல் படையுடன் என்சிபி அதிகாரிகளும் இணைந்து குஜரத் கடலோர பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத்தின் போர்பந்தர் அருகே போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடலோர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று நள்ளிரவு அரபிக்கடலில் 350 கிலோ மீட்டர் தொலைவில் சந்தேகத்திற்கு இடமாக வந்த பாகிஸ்தான் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த படகை கடல் வழியாகவும் வான்வழியாகவும் இந்திய கடலோர காவல் படை சுற்றி வளைத்தது.
இதையடுத்து, அவர்களின் படகில் சோதனை செய்த போது 80 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதன், மதிப்பு ரூ. 480 கோடியாகும். இதையடுத்து, படகில் வந்த ஆறு பாகிஸ்தானியர்களையும் கடலோர காவல் படை, என்.சிபி அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு படை ஆகியவை இணைந்த கூட்டு படை கைது செய்தது. போர்பந்தர் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட பாகிஸ்தானியர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
கடலோர காவல்படை, ஏடிஎஸ் மற்றும் என்சிபி ஆகியவை இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளில், ரூ.3,135 கோடி மதிப்பிலான 517 கிலோ போதைப் பொருள்கள் கைப்பற்றியுள்ளன.