தொடர் வன்முறை மற்றும் அரசியல் குழப்பங்கள் காரணமாக, ஹைதியின் பிரதமர் ஏரியல் ஹென்றி இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஹைதி நாட்டில் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஆயுதக் குழுவினரின் வன்முறை தாக்குதல்களால், பல்வேறு இன்னல்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
ஹைதி நாட்டில் கடும் வறுமை, ஊழல், ஆயுதக் குழுவினரின் தாக்குதல், தொடர் போராட்டங்கள், வன்முறை என பல பிரச்னைகள் உள்ளன.
இந்நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதிக்குள் ஜனாதிபதி பதவிக்கான தேர்தலை நடத்தி இருக்க வேண்டும். ஆனால், அரசாங்கம் தேர்தலை நடத்த தவறியதால், சமூக பதற்றம் அதிகரித்துள்ளது.
பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலக வேண்டும் என்று ஆயுதக்குழுக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. கடந்த மாத இறுதியில் இருந்து தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பொது இடங்கள் மீது ஆயுதக்குழுக்கள் தாக்குதல்களை நடத்துகின்றன. குறிப்பாக, காவல் நிலையங்கள், சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து ஆயுதக் குழுக்கள் தாக்குதல் நடத்துகின்றன. ந்நிலையில், ஹைதியின் பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.