நாமக்கல் அருகே சிவன் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்சி – நாமக்கல் சாலையில், மேட்டுப்பட்டியில் அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேசுவரா் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்குப் பிரதோஷம், சிவராத்திரி மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தா்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், இந்த கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசய நிகழ்வு ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது.
ஒவ்வோா் ஆண்டும் மாசி மாதம் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில், கோவில் பிரகாரத்தில் உள்ள நந்தி மீதும், கருவறையில் உள்ள லிங்கத்தின் மீதும் சூரிய ஒளி நேரடியாக விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
அதன்படி திங்கள்கிழமை காலை 6.25 முதல் 6.30 வரையில் ஐந்து நிமிடம் சூரியஒளி சிவலிங்கம் மீது விழுந்தது. அதுபோல, செவ்வாய்கிழமையான நேற்றும் சூரியஒளி சிவலிங்கம் மீது விழுந்த அதிசயம் நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சுவாமிக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை மனம் உருக வழிபட்டனர்.