தேசிய மாணவர் படையை (என்.சி.சி) விரிவுபடுத்தி, கூடுதலாக 3 லட்சம் கேடட் பணியிடங்களை உருவாக்கும் திட்டத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த விரிவாக்கம், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களிலிருந்து என்.சி.சி.க்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1948-ஆம் ஆண்டில் வெறும் 20,000 மாணவர்களைக் கொண்டிருந்த என்.சி.சி, இப்போது அதன் பொறுப்புகளில் 20 லட்சம் பேரைக் கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பாக மாறியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி என்.சி.சி ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பாடமாக வழங்கப்படுவதால், இந்த விரிவாக்கம் தேசத்தின் எதிர்காலத் தலைவர்களாக முக்கியப் பங்கு வகிப்பதை நோக்கிய இளைஞர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக இருக்கும்.
இந்த விரிவாக்கத்தின் நீண்டகாலத் தாக்கம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காலியிடங்களை விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிக்க வழிவகுக்கும். மேலும் தேசிய மாணவர் படையில் சேர விரும்பும் நிறுவனங்களின் காத்திருப்புப் பட்டியலைக் குறைக்கும். விரிவாக்கத் திட்டத்தில் நான்கு புதிய குழு தலைமையகங்களை நிறுவுதல் மற்றும் இரண்டு புதிய என்.சி.சி அலகுகளைச் சேர்த்தல் ஆகியவை அடங்கும்.
முன்னாள் ராணுவ வீரர்களை தேசிய மாணவர் படை பயிற்றுனர்களாக நியமித்து அவர்களின் திறமை மற்றும் பரந்த அனுபவத்தை மேம்படுத்துவது, விரிவாக்கத் திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இந்த உன்னத முயற்சி, தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு தரமான பயிற்சி அளிப்பதை உறுதி செய்வதுடன், முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.
இந்த விரிவாக்கம், ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் சேவை ஆகியவற்றை உள்ளடக்கிய எதிர்காலத் தலைவர்களை வடிவமைப்பதற்கான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. தேச நிர்மாணத்திற்கு இளைஞர்கள் அர்த்தமுள்ள பங்களிப்பை அளிக்கும் சூழலை ஊக்குவித்து, மாற்றத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதை தேசிய மாணவர் படை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சியானது ‘வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற இலக்கை அடைவதில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘அமிர்த தலைமுறை’யின் உந்துதல், ஒழுக்கம் மற்றும் தேசபக்தி கொண்ட இளைஞர்களின் தளத்தை விரிவுபடுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.