மதுரை சர்வதேச விமான நிலையத்தில், பசை மற்றும் பவுடர் வடிவில் கடத்தி வரப்பட்ட, ரூ.21.31 லட்சம் மதிப்பிலான, 322 கிராம் எடை கொண்ட தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் சிலர் தங்கள் உடைமைகள் மற்றும் உடைகளில் மறைத்து வைத்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வருகின்றனர். இதனை கண்டறிந்து சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், துபாயில் இருந்து மதுரைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, துபாயில் இருந்து வந்த பயணி ஒருவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில், அவருடைய உடைமைகளில், சுமார் 322 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.21 லட்சத்து 31 ஆயிரத்து 640 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனை அடுத்து, பசை மற்றும் பவுடர் வடிவில் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.