கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகையில் விவசாய நிலத்தில் 12 அடி நீளம் உள்ள முதலை புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அடுத்துள்ள சிறுமுகை அருகே உள்ள மொக்கை மேடு பகுதி உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதில் அவர், வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல அவர் தனது விவசாய நிலத்தைப் பார்வையிட சென்றுள்ளார். அப்போது, வாழை மரங்களுக்கு நடுவே சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை இருந்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ் செல்வன், இது குறித்து போலீசாருக்கும், சிறுமுகை வனச்சரக அலுவலருக்கும் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர், 12 அடி ராட்சத முதலையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விவசாயத் தோட்டத்திற்கு முதலை எப்படி வந்தது என கருத்து தெரிவித்த வனத்துறையினர், கோடை வெயில் தற்போது அதிகரித்துவிட்டது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே, அணையின் நீர் தேக்க பகுதியில் உள்ள முதலை சுமார் ஒரு கிமீ தொலைவில் உள்ள தமிழ் செல்வனின் தோட்டத்திற்கு வந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.
வாழை தோட்டத்தில் முதலை உலா வருவதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். ஆனால், பொது மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். விரைவில் முதலையை பிடித்துவிடுவோம் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.