இந்திய பெருங்கடல் அருகே வங்கதேசத்தின் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர். தற்போது, இக்கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் வணிக கப்பல்களை கடத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அரபிக் கடலில் செல்லும் கப்பல்களை கடத்திச் சென்று பிணைத் தொகை கேட்டு மிரட்டுகின்றனர். மேலும், கப்பலில் உள்ளவர்களை காயப்படுத்துவதோடு, கப்பலில் இருக்கும் பொருட்களையும் கொள்ளையடித்து செல்கின்றன.
கடற்கொள்ளையர்களை ஒடுக்க இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் சோமாலிய கடற்கொள்ளையர்களால், கடத்தப்பட்ட கப்பலை இந்திய கடற்படை அதிரடியாக களத்தில் இறங்கி மீட்டது.
இந்நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் வங்கதேசத்தின் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர். இந்திய பெருங்கடல் வழியாக சென்ற கப்பலில் ஆயுதங்களுடன் 22 பேர் ஏறி உள்ளனர். அவர்கள் கப்பலில் இருந்த ஊழியர்களை மிரட்டி சிறை பிடித்துள்ளனர். தற்போது, கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.