குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்து முடியாது என மாநிலங்கள் கூற முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெளிவுபடுத்தியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனியார் செய்தி நிறுவனத்திற்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, ராகுல் காந்தி, மம்தா அல்லது கெஜ்ரிவால் உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் பொய் அரசியலில் ஈடுபடுகின்றன. பாஜக தனது 2019 தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்திருந்தோம்.
அந்த வாக்குறுதியின் கீழ், குடியுரிமை (திருத்தம்) மசோதா 2019 இல் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. கோவிட் காரணமாக அது தாமதமானது. எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக பிரச்சினை கிளப்புகின்றன என தெரிவித்தார்.
சிஏஏ அரசியலமைப்பிற்கு விரோதமானது என்ற கூற்றை நிராகரித்த ஷா, அவர்கள் எப்போதும் 14வது பிரிவைப் பற்றி பேசுகிறார்கள். அந்த சட்டப்பிரிவில் இரண்டு உட்பிரிவுகள் இருப்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள் என்றார்.
இண்டி கூட்டணி ஆட்சிக்கு வராது என்பது அவர்களுக்கும் தெரியும். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுதான் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்தது. சிஏஏவை ரத்து செய்வது சாத்தியமற்றது.இது முழுக்க முழுக்க அரசியலமைப்புச் சட்டம்.
உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்கவில்லை. சிஏஏவை அமல்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை உத்தவ் தாக்கரே தெளிவுபடுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். அவர் சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக அரசியல் செய்து வருகிறார்.
சமணர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிக்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு எதிராக கெஜ்ரிவால் குரலெழுப்புகிறார்.
அவர்கள், லட்சக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை இழந்து விட்டு, அகதிகளாக இந்தியாவுக்கு வந்தவர்கள். நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு இன்றி அவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஏன் நாம் இரக்கம் காட்ட கூடாது? அவர்களுடைய நாடுகளில் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு நம் நாட்டுக்கு வந்தவர்கள் மீது கெஜ்ரிவால் போன்ற தலைவர்களுக்கு இரக்கமே இல்லை என்றும் கூறினார்.
CAA மற்றும் NRC ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, “NRC க்கும் CAA க்கும் எந்த தொடர்பும் இல்லை. அஸ்ஸாம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் CAA செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். .
சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மாட்டேன் எனக் கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை. குடியுரிமை என்பது மத்திய அரசின் கீழ் வருவதால் மாநிலங்களுக்கு உரிமை இல்லை என்றும் அமித் ஷா தெரிவித்தார்.