கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலரான கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக, அன்றைய வீட்டு வசதித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது, 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுதலை செய்து எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அப்போது, ஐ.பெரியசாமியின் விடுதலையை ரத்து செய்தார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், முறையான காரணங்களை ஆய்வு செய்யாமல் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளார். எனவே, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.