2024 ஐ.பி.எல். தொடரில் இருந்து டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் ஹார்ரி புரூக் விலகியதன் காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்து டெல்லி அணி வீரர் ஹார்ரி புரூக் விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் விலகியதன் காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ” ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். டெல்லி அணிக்காக ஏலத்தில் வாங்கப்பட்ட போது, இந்த சீசனில் விளையாட ஆர்வமாக இருந்தேன்.
ஆனால் சூழ்நிலை வேறு மாதிரி அமைந்துள்ளது. ஐபிஎல் தொடரில் இருந்து பின் வாங்கியதற்கு சொந்த காரணங்களை கூற வேண்டும் என்று நினைத்ததில்லை. கடந்த மாதம் எனது பாட்டி மறைந்துவிட்டார்.
நான் சிறு வயதில் இருந்து எனது பாட்டியின் வீட்டில் வளர்ந்தவன், அவர் எப்போதும் எனக்கு ஒரு தூண் போல் நம்பிக்கை அளித்தவர். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதற்கும் அவரே முதன்மையான காரணம்.
பாட்டி வீட்டில் இருந்து போது அவர் இல்லாமல் ஒருநாளும் முழுமையடையாது. நான் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதை அவர் நேரில் வந்து பார்த்தது மகிழ்ச்சியாக இருந்தது. அதேபோல் எனக்காக சில விருதுகளை பெற்று கொண்டுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க அபுதாபியில் இருந்து புறப்படும் போது தான் பாட்டியின் உடல்நிலை பாதிப்பு குறித்து தெரிவிக்கப்பட்டது. இதனால் உடனடியாக நாடு திரும்ப முடிவு செய்தேன்.
தற்போது எங்களிடம் இருந்து பாட்டி மறைந்துவிட்டார். இதனால் எனது குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய சூழலில் உள்ளேன். கடந்த சில ஆண்டுகளாகவே மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன். அதேபோல் குடும்பத்தை கடந்து வேறு எதுவும் முக்கியமில்லை.
அதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதே சரியான முடிவாக கருதுகிறேன். என்னிடம் இன்னும் பல ஆண்டு கால கிரிக்கெட் மீதமிருப்பதால், வரும் காலங்களில் நிச்சயம் விளையாடுவேன்.
இந்த கடினமான சூழலில் எனக்கு ஆதரவாக இருந்த இங்கிலாந்து நிர்வாகம் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் இரண்டுக்கும் நன்றி கூட கடமைப்பட்டுள்ளேன்” என்று மனமுருகி தெரிவித்துள்ளார்.