அரியானாவில் உள்ள 6 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடும் 72 தொகுதிகளுக்கான 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரியானாவில் உள்ள 6 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்டுள்ளார்.
அதன்படி பிவானி-மகேந்திரகர் தொகுதியில் தரம்பீர் சிங், குருகிராம் தொகுதியில் ராவ் இந்தர்ஜித் சிங், பரிதாபாத்தில் கிரிஷன் பால் குர்ஜார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்கள் அனைவரும் ஏற்கனவே அத்தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக உள்ளனர்.
கர்னால் சட்டமன்றத் தொகுதியில் இருந்து நேற்று ராஜினாமா செய்த ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால், கர்னால் தொகுதியில் மக்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ராஜினாமா செய்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த காங்கிரஸின் முன்னாள் மாநிலத் தலைவர் அசோக் தன்வார் சிர்சா வேட்பாளராகவும், மறைந்த ரத்தன் லால் கட்டாரியாவின் மனைவி பான்டோ கட்டாரியா அம்பாலா தொகுதியிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.