திமுக ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் மீறி நெடுஞ்சாலையில் இருந்த சட்டவிரோத கொடி கம்பத்தை அகற்றிய ஐபிஎஸ் அதிகாரிக்கு பாராட்டு குவிகிறது.
காஞ்சிபுரம் காவல் உதவிக் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் உதயகுமார். இவர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பத்தை அகற்ற சென்றுள்ளார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியக் குழுத் தலைவர் கருணாநிதி கொடி கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.ஆனால் நீதிமன்ற உததரவு உள்ளதை சுட்டிக்ககாட்டிய உதயகுமார், கொடிக்கம்பத்தை அகற்றுவதில் உறுதியாக இருந்தார்.
வருவாய்த்துறையினரும், காவல்துறையினரும் பொறுமையாக விளக்கமளித்தும், கருணாநிதி தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்துள்ளார். நான் என் வேலையைச் செய்கிறேன், என்னைத் தடுக்காதீர்கள், நான் தவறாக நடந்தால் என்மீது வழக்குத் தொடருங்கள் என ஏஎஸ்பி உதயகுமார் தெரிவித்து கொடிக் கம்பத்தை அகற்ற உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து அந்த கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏஎஸ்பி உதயகுமாரின் துணிச்சல் நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.